Author Archives: admin

ஊடகங்களுக்கான அறிக்கை

By | 28.09.2024

கடந்த வாரம் இடம் பெற்ற இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதித் தேர்தலில் நாட்டு மக்கள் நலன்களை முன்நிறுத்தி மக்கள் சார்புக் கொள்கைகளை முன்வைத்த தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்று அதன் தலைவர் அனுர குமார திசநாயக்க ஜனாதிபதியாகப் பதவி பெற்றுள்ளார். இவ் வெற்றியின் அடிப்படையை நோக்கின் 2022ம் ஆண்டின் அன்றைய ஆட்சி அதிகாரத்திற்கு எதிரான காலி முகத்திடல் அரகலய மக்கள் எழுச்சியின் போராட்ட உணர்வலைகள் உழைக்கும் மக்களின் வாக்குகளாக மாற்றமடைந்திருப்பதைக் காண முடிகிறது. இத்தகைய வாக்களிப்பானது பாரம்பரியமான மேட்டுக்குடி உயர் வர்க்கப் பரம்பரை ஆளும் வர்க்க சக்திகளை நிறைவேற்று அதிகார அரங்கிலிருந்து அப்புறப்படுத்தியிருக்கிறது. ஆதலால் கட்டமைப்புவாயிலான மாற்றங்களை எதிர்பார்த்து வாக்களித்த உழைக்கும் மக்களும் அதன் மூலம் ஜனாதிபதிப் பதவி பெற்ற அனுரகுமார திசாநாயக்காவும் தேசிய மக்கள் சக்தியும் வாழ்த்துக்கும் வரவேற்புக்கும் உரியவர்கள் என்பதாகவே எமது புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி கருதுகின்றது.

மேலும் எமது நாடு பெயரளவில் பெயரளவில் கொலனியத்திலிருந்து கொலனியத்திலிருந்து விடுபட்ட போதும் நவகொலனிய ஏகாதிபத்தியப் பிடிக்குள் இருந்து வரும் ஒரு நாடாகும். அதன் காரணமாகவே மோசமான அரசியல் பொருளாதார சமூக நெருக்கடிக்குள் நாடும் மக்களும் தள்ளப்பட்டார்கள். நாட்டின் வளங்களும் மக்களின் உழைப்பும் அந்நிய வல்லரசு சக்திகளால் உறுஞ்சப்பட்டன. அவற்றுக்கு நிலவுடைமை வழி வந்த உள்நாட்டு முதலாளித்து சக்திகள் ஆளும் நிலையில் ஆதரவும் அரவணைப்பும் செய்து வந்தன. இவற்றுக்கு எதிராக அவ்வப்போது போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட போதிலும் அவை ஆளம் வர்க்கத்தால் முறியடிக்கப்பட்டன. பௌத்த சிங்கள தேசிய உணர்வு எனக் கூறிக்கொண்டு பதவிக்கு வந்தவர்களே உள்ளூர் உயர் வர்க்கத் தரப்புகளுக்கும் ஏகாதிபத்திய வல்லரசு ஆதிக்க சக்திகளுக்கும் அடிபணிந்து நாட்டு நலன்களையும் மக்கள் வாழ்வையும் நாசப்படுத்தினர். இவற்றை மறைக்கவும் மக்களை திசை திருப்பி வைத்திருக்கவும் உள்ளுர் ஆளும் வர்க்கத் தரப்புகளும் அந்நிய ஏகாதிபத்திய பிராந்திய மேலாதிக்க சக்திகளும் தேசிய இனப்பிரச்சினையை இனங்களுக்கிடையிலான பகை உணர்வுகளகவும் முரண்பாடுகளாகவும் வளர்த்து தத்தமது வர்க்க நலன்களைப் பேணிக் கொண்டனர். இவை அனைத்தும் உச்சமாகியே நாடு மோசமான பொருளாதார நெருக்கடிகளுக்கு உள்ளாகி வங்குறோத்து நிலைக்குள் தள்ளப்பட்டது. மக்கள் அடி நிலை வாழ்வுக்குள் தள்ளப்பட்டனர்.

அரசியல்

இத்தகைய நெருக்கடிச் சூழலில் மக்களின் போராட்ட எழுச்சியாக தோற்றம் பெற்று அன்றைய ஆட்சியாளர்களை ஆளும் அரங்கிலிருந்து அகற்றிய மக்கள் போராட்டமே அரகலய மக்கள் எழுச்சியாகும். ஆனால் அவ் எழுச்சியை அந்நிய ஏகாதிபத்திய பிராந்திய மேலாதிக்க சக்திகள் திசை திருப்பி மீளவும் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஆளும் வர்க்க சக்திகளை குறுக்கு வழியில் அதிகாரத்திற்கு கொண்டு வந்து இரண்டு வருட ஆட்சியை நடாத்த வழி வகுத்தனர்.

இவற்றுக்குப் பெரும்பான்மையான உழைக்கும் மக்கள் தகுந்த பதிலடி வழங்கும் வகையிலேயே தேசிய மக்கள் சக்தியையும் அதன் தலைவர் அனுரகுமார திசநாயக்காவையும் ஜனாதிபதிப் பதவிக்கு கொண்டு வந்திருக்கிறார்கள். எனவே நாட்டு மக்கள் எதிர் நோக்கியுள்ள மோசமான பொருளாதார நெருக்கடிகளுக்கு உரிய தீர்வுகளை முன்னெடுக்கும் அதே வேளை தீர்வு காணப்படாத தேசிய இனப்பிரச்சனைக்கு உரிய நியாயமான தீர்வு காணப்படும் அவசியத்தையும் இவ் வேளையில் எமது கட்சி வலியுறுத்துகிறது.

அதேவேளை நாட்டின் நலன்களையும் மக்கள் சார்பு செயற்பாடுகளையும் உறுதியாக முன்னெடுக்கும் சூழலில் அவற்றுக்கு எதிராக உள்ளுர் ஆளும் வர்க்க சக்திகளும் அவர்களுக்குப் பின்னால் இருந்து முடுக்கி விடும் அந்நிய ஏகாதிபத்திய பிராந்திய மேலாதிக்க சக்திகளுக்கும் எதிராக எப்பொழுதும் எமது புதிய ஜனாநாயக மாக்சிச லெனினிசக் கட்சி மக்கள் சார்பாகவும் நாட்டின் நலன்கள் சார்பாகவும் தேசிய இனங்கள் சார்பாகவும் உறுதியாக இருந்து வரும் என்பதை இவ் வேளை உறுதி அளிக்கின்றது. அத்துடன் நியாயமானவற்றை ஆதரிக்கவும் மக்கள் விரோதமானவற்றை மக்களோடு இணைந்து எதிர்த்து நிற்கவும் எமது கட்சி முன் நிற்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறது.

சி.கா. செந்திவேல் பொதுச் செயலாளர்.